‘ஆக்கப்பூர்வமாக பேசும் போது அக்கப்போர் எதற்கு?’ செங்கோட்டையன் குறித்து கேள்வி.. முதல்வர் பதில்!

Sep 8, 2025 - 14:35
 0  0
‘ஆக்கப்பூர்வமாக பேசும் போது அக்கப்போர் எதற்கு?’ செங்கோட்டையன் குறித்து கேள்வி.. முதல்வர் பதில்!

முதலீடு பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘ஒரு வாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மன நிறைவோடு திரும்பியிருக்கிறேன். இந்த பயணத்தைப் பொருத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள். உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் ஆறு அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

நான் புறப்படுவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே, என்னுடைய இந்த ஒட்டுமொத்தப் பயணத்தையும் முறைப்படுத்துவதற்காக மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து அந்த பணியை வெற்றிகரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! தொழில்துறை அமைச்சரைப் பொருத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சர் என்பதை ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்துள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட என்னுடைய பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாகஇந்த பயணம் அமைந்திருக்கிறது. இந்த ஃபாரின் விசிட்டில் (Foreign Visit) தான், மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகவும் சக்சஸ்புல் (Successful) மட்டுமல்ல, மிகவும் Proud-ஆன டூராகவும் (Tour) இந்தப் பயணம் அமைந்தது. உங்களுக்கே தெளிவாக தெரிந்திருக்கும்.

ஆமாம்!... ஆயிரம் ஆண்டு பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்ததுதான், அந்தப் பெருமைக்குக் காரணம்! அதுமட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில் நாம் கடந்து வந்த பாதையையும், இனி அடைய வேண்டிய இலக்குகளையும் பற்றி விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன்.

அதோடு, அயலகத் தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் திராவிட மாடல் பற்றி உரையாடியது, இலண்டனில் இருக்கும் பொதுவுடைமைத் தத்துவ மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடம், சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, தமிழ்க் காதலர் ஜி.யு.போப் அவர்கள் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பல பெருமைகளுடன் நான் வந்திருக்கிறேன்.

முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல, பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக என்று இந்த பயணம் அனைத்து வகையிலும் எனக்கு பர்சனலாக (Personal) மறக்க முடியாத பயணமாக அமைந்திருக்கிறது.

சிலரால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், "எதற்கு இந்த வெளிநாட்டுப் பயணம்? இங்கே இருக்கின்ற நிறுவனங்களைச் சந்தித்து பேசினால் போதாதா?" என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது என்னவென்றால், ஜெர்மனியில் நடந்த இன்வெஸ்டர்ஸ் மீட்டில், அதிகமான ஜெர்மன் கம்பெனி வந்திருந்தார்கள். அப்போது நம்முடைய தமிழ்நாட்டைப் பற்றி எடுத்துச் சொன்னதும், பல முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா... "தமிழ்நாட்டில் இவ்வளவு பொட்டன்ஷியல் (Potential) இருக்கிறது என்று, இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது. இதற்கு முன்பு வேறு ஒரு மாநிலம்தான் தங்களுடைய பொட்டன்ஷியலை (Potential) பற்றி பெருமையாக சொல்லியிருந்தார்கள். இனி, நிச்சயம் தமிழ்நாட்டை நோக்கி அதிகமான முதலீட்டாளர்கள் வருவார்கள்" என்று சொன்னார்கள்.

அடுத்து ஜெர்மனியில், NRW - மினிஸ்டர் ப்ரெசிடண்ட்

திரு. ஹெண்ட்ரிக் வுஸ்ட் அவர்களைச் சந்தித்து பேசினேன். அவரும் அதையேதான் சொன்னார்...

இப்படியான தொடர்புகளை ஏற்படுத்தவும், பார்ட்னர்ஷிப்பை (Partnership) உருவாக்கவும்தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சரான நானே நேரில் சென்றேன். ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்,இன்னொரு நாட்டின் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை சந்திக்கும்போது, பிசினஸை (Business) தாண்டி, இந்த உறவு வலிமையாகிறது. அதுதான் முக்கியம். அப்படித்தான், ஹெண்ட்ரிக் வுஸ்ட், இங்கிலாந்து அமைச்சர் திருமிகு. கேத்தரின் வெஸ்ட் ஆகியோருடைய சந்திப்புகளெல்லாம் இருந்தது.

அதேபோல்தான், அவர்கள் கேட்கின்ற அடுத்த கேள்விக்கான பதில் என்னவென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும், அவர்கள் புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களுடைய புதிய முதலீடுகளையும் தமிழ்நாட்டிலேயே மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டிய நிறுவன உயரதிகாரிகளை சந்தித்து பேசும்போதுதான், அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதற்காக இது போன்ற பயணங்கள் தேவைப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தமிழ்நாடு கொண்டிருக்கக்கூடிய மனித வளம், உட்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் பற்றி முதலமைச்சராக இருக்கக்கூடிய நானே அவர்களிடம் எடுத்துச் சொல்கிறேன். இப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், பல நிறுவனங்களும் இந்தச் சந்திப்பினால் நிச்சயம் தமிழ்நாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு

8-ஆம் தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 11-ஆம் தேதி ஓசூருக்குச் சென்று, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடத்தையும் திறந்து வைத்து, 1100 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறேன்.

அதேமாதிரி, ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியதுபோன்று, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தப் போகிறோம். அங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களுடைய வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது, இது தொடரும்... தொடரும்...

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களுடைய வெளிநாட்டு பயணம் என்பது உங்களுடைய முதலீட்டிற்காக நடத்தினார் என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதை பற்றி…

முதலமைச்சர் அவர்களின் பதில்: ஒரு வகையில் அவர் சொல்வது முதலீடு செய்யப்போனதைப்பற்றி திரித்து சொல்லியிருக்கிறார். என்னைப்பொருத்தவரை சொல்ல விரும்புவது, சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். தந்தைப் பெரியாரின் உணர்வுகளை பெரியாரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அதுதான் உண்மை. அந்த அடிப்படையில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

கேள்வி: அதிமுக-வின் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்: ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த அக்கபோரான கேள்விகளையெல்லாம் கேட்கிறீர்களே.

கேள்வி: தமிழர்களை சந்தித்தீர்கள்.தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளீர்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது. அவர்களுடைய ஆர்வம் என்னவாக இருக்கிறது. அது பற்றி…

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்: அளவு கடந்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஏற்கெனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். மிகவும் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். அந்த நிலையை நேரடியாக நாங்கள் பார்த்தோம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Deenadayalan Welcome to TNNEWS, your trusted source for news and updates from around the world. Our goal is to provide timely, informative content across various topics, including world news, technology, health, education, movies, and more. Please note that TNNEWS is an independent news platform created to share knowledge, useful links, and updates for your benefit. We are not affiliated with any government or political organization. The content here is purely for informational purposes and aims to provide insights into global and local trends. Feel free to explore, read, and stay informed!