‘தேவருக்கு பாரத ரத்னா.. மதுரை விமான நிலையத்துக்கு பெயர்..’ அதிமுக முன்னெடுக்கும் என இபிஎஸ் அறிவிப்பு!

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் எடப்பாடியாருக்காக காத்திருந்த பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.
“திமுக ஆட்சி அமைந்து 52 மாதம் நிறைவடைந்துவிட்டது என்றாலும், இந்த ஆட்சியில் இந்த தொகுதிக்கு எந்த பெரிய திட்டமும் கொடுக்கவில்லை. இங்கு அமைச்சரும் இருக்கிறார் என்றாலும் திண்டுக்கல் மாவட்டத்துக்கே எந்த திட்டமும் கொடுக்கவில்லை,
இதுவே அதிமுக ஆட்சியில் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 350 கோடி ரூபாயில் அமைத்துக்கொடுத்தோம். உயர்தர அறுவை சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு வசதி நிறைந்தது. நான் முதல்வராக இருந்தபோது சிறப்பான சிகிச்சை அளிக்க நிதி எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அமைத்துக் கொடுத்தேன்.
இப்படி ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை இங்கிருக்கும் அமைச்சர் கொடுத்திருக்கிறாரா? இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தனது சொத்தின் ஒரு பகுதியை ஜாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைப்போம், அதற்கான முயற்சி எடுப்போம்.
தேசியமும், தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்துகாட்டிய தேவர் பெருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி என்பவரை சிலபேர் கடுமையாக தாக்கினார்கள். அதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. டிஜிபி அலுவ்லகம் முன்பே ஒருவர் தாக்கப்படுகிறார் என்றால் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று பாருங்கள். ஆடுதுறை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் மீது வெடிகுண்டு வீசினார்கள். அவர் கழிவறைக்குச் சென்று உயிர் தப்பியிருக்கிறார். அவருடன் இருந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை. பட்டப்பகலில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசுகிறார்கள் என்று சொன்னால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?
திமுகவைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பேருந்து பயணத்தில் ஒருவரிடமிருந்து 4 பவுன் நகை திருடியிருக்கிறார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. திமுகவின் யோக்கியதை என்னவென்று எண்ணிப்பாருங்கள். திருட்டு வழக்கில் இருப்பவரை தேர்வு செய்யும் நிலை திமுகவில் இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஊராட்சி மன்றத் தலைவரே திருடுகிறர் என்றால் கீழே இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?
போதைப்பொருள் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. கஞ்சா சாக்லெட் ரூபத்தில் கிடைக்கிறது. நான் பலமுறை எச்சரித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்துவருகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். ஆனால் இன்று முதல்வர், போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று சொல்கிறார். எப்போது? எல்லோரும் சீரழிந்த பின்னர் இப்போதுதான் ஞானோதயம் வந்து அறிவுரை கூறுகிறார். இப்படிப்பட்ட பொம்மை முதல்வர் தேவையா? சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் இப்படிப்பட்ட சம்பவம் தொடர்கதையாகிறது.
இங்கிருக்கும் அமைச்சர் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர். ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் நிதியை எடுத்து வேறு வேலைக்குப் பயன்படுத்துகிறார். எப்படி ஊராட்சி மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்ய முடியும்? இது மக்களை வஞ்சிக்கும் செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்த அரசும் உள்ளாட்சி நிதியை வேறு பணிக்கு செயல்படுத்தியது கிடையாது, ஆனால் திமுக அரசு செய்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
அதிமுக ஆட்சியில் நிறையத் திட்டங்கள் கொண்டுவந்தோம். அவற்றை எல்லாம் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்ததே ஏழை மக்களுக்கு நன்மை செய்யத்தான். அம்மாவும் அம்மா வழியில் நாங்களும் அப்படியே ஆட்சி செய்தோம்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக் கொடுத்தோம்.
சூழ்நிலைக்கு ஏற்ப மக்களின் எண்ணவோட்டத்துக்கு தக்கவாறு ஆட்சி செய்யும் கட்சி அதிமுக. திமுக குடும்பத்துக்காக உழைக்கும் கட்சி. அது கார்ப்பரேட் கம்பனி. கருணாநிதி ஓனராக இருந்தார், இப்போது ஸ்டாலின் அதிபராகிவிட்டார், உதயநிதி வருவதற்கு துடிக்கிறார். உதயநிதி என்ன சேவை செய்தார்? போராட்டம் நடத்தி ஜெயிலுக்குப் போயிருக்கிறாரா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் தான் அதுதான் அவரது அடையாளம்.
இங்கிருக்கும் அமைச்சர் பெரியசாமி கட்சிக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார். முன்பு ஒரு நிகழ்ச்சியில் மனு வாங்கினார்கள். அப்போது உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரியசாமியை ஓரமாக உட்கார வைத்துவிட்டனர். திமுகவில் உழைப்பவர்களுக்கெல்லாம் ஓரமாகத்தான் இடம் கிடைக்கும். அப்போது மக்களிடம் மனு வாங்கிக்கொண்டு போனார்கள், பிரச்னையை இன்னும் தீர்க்கவில்லை.
பெரியசாமி வயது என்ன, உதயநிதி வயது என்ன? உழைப்பவர்களுக்கு வேலை கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் எல்லா அதிகாரமும் கிடைக்கும். கருணாநிதி தலைவராகவும் முதல்வராகவும் இருந்தார், ஸ்டாலின் வந்தார், பின்னர் உதயநிதி இளைஞரணி செயலாளர், கனிமொழி மகளிரணிச் செயலாளர் என்று மூன்று முக்கிய பதவிகளையும் குடும்பமே எடுத்துக்கொண்டது.
கட்சி ஆட்சி இரண்டிலும் உயர்ந்த பதவிக்கு திமுகவில் வேறு யாரும் வரமுடியாது. டெல்லிக்குச் சென்றாலும் கருணாநிதி குடும்பம் தான் ஆதிக்கம். நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியையும் கனிமொழி வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. உங்கள் ஊரையே பட்டா போட்டாலும் போட்டுவிடுவார்கள். கோடிகோடியாக சம்பாதிப்பதுதான் அந்த குடும்பத்தின் நோக்கம், மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
இதுவே அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உழைத்தால் எம்.எல்.ஏ, எம்பி, முதல்வரே ஆகலாம். இப்படி ஸ்டாலினால் சொல்ல முடியுமா? நான் கீழே இருந்துதான் இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். எம்ஜிஆரும் அம்மாவும் சாதாரண நபரையும் அமைச்சர் ஆக்கினார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்த ஒரு பெண் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் பெயின்ட் அடிப்பவர் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். ஏழைகளையும் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக.
திமுகவில் கருணாநிதி குடும்பம் போலவே மற்ற நிர்வாகிகளும் இருக்கிறார்கள். பெரியசாமி மகன் எம்.எல்.ஏ, நேரு மகன் எம்பி,. துரைமுருகன் மகன் எம்பி. இதுதான் அங்கு வழக்கம்.
ஆத்தூர் கிராமங்கள் நிறைந்த பகுதி. கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டத்தை முடக்கும் திமுக மோசமான அரசு.
ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். அதுமட்டுமின்றி, வறட்சி ஏற்பட்டக் காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் 2448 கோடி கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான்.
விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இன்று ஒரு லோடு மண் அள்ளினால் 2000 ரூபாய் கொடுக்க வேண்டும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம்.
இந்த பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம். கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள், கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019ல் அறிவித்தோம், இரண்டாண்டுக்கு ஒருமுறை கோவை கொடீசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தி நெசவாளர்கள் சிறக்க நடவடிக்கை எடுத்தோம். நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் நெய்த துணிகளுக்கு அவ்வப்போது பணப்பட்டுவாடா செய்தோம்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை எல்லாம் உயர்ந்துவிட்டது. ஒப்பிட்டுப் பாருங்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். மின்கட்டணத்தை இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தது. ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
ஆத்தூர் தொகுதியில், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் 115 கோடியில் தூர் வாரப்பட்டது, கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தூய்மையான நீரைக் கொடுத்தோம், ஆத்தூர் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் 10 கோடியில் அமைக்கப்பட்டது. ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது, தடுப்பணை கட்டப்பட்டது, குளங்கள் தூர்வாரப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றினோம். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்’’ என்றார் உற்சாகத்துடன்.
டாபிக்ஸ்
What's Your Reaction?






